முதல் ஒருநாள் போட்டி: 76 ரன்னில் சுருண்ட இலங்கை- 198 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப்போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்னில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இலங்கை அணியில் மேத்யூஸ் 18, கருரத்ணே 11, லகிரு குமாரா 10 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர்.
நியூசிலாந்து தரப்பில் ஹென்றி ஷிப்லி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 28-ந் தேதி நடைபெறுகிறது.