ராகுல்காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் – டெல்லி காவல்துறை அனுமதி மறுப்பு

பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெறும் ஒருவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-இன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவார். தற்போது ராகுல் காந்தி இந்த பிரிவிலேயே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் இன்று நாடு தழுவிய சத்தியாகிரக போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். டெல்லி தொடங்கி அனைத்து மாநிலங்களில் உள்ள காந்தி சிலைகள், மாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகங்கள் முன்னர் இந்த சத்தியாகிரக போராட்டம் காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

டெல்லியில் காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் சத்தியாகிரக போராட்டம் தொடங்கியது. இதில் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கேசி வேணுகோபல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதே வேளை, இந்த போரட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

“ராகுல் காந்தியை பேச விடாமல் பாஜக தடுக்க நினைக்கிறது. தேசத்திற்காகவும், நாட்டு மக்களின் உரிமைக்காகவும் ராகுல் காந்தி போராடி வருகிறார். இதை நாங்கள் ஒரு போதும் நிறுத்த மாட்டோம்” என போராட்டத்தில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.