’13’ குறித்து கொழும்புக்கு டில்லி அழுத்தம் கொடுக்கவே முடியாது : சரத் வீரசேகர
“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா எந்த வகையிலும் அழுத்தம் கொடுக்கவே முடியாது.”
– இவ்வாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை சிறப்புத் தூதுவர் மூலம் கையாள இந்தியா முயற்சிக்கின்றது என வெளிவந்த செய்தி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடவே முடியாது. அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் இலங்கை – இந்தியா உடன்படிக்கையின் பிரகாரம் அன்று நிறைவேற்றப்பட்டமை உண்மை. அதற்காக இந்தியா இன்று சொல்வதையெல்லாம் நாம் ஏற்கவேமாட்டோம். இந்த விவகாரத்தில் இந்தியா அமைதியாக இருப்பதே நல்லது.
13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா எந்த வகையிலும் அழுத்தம் கொடுக்கவே முடியாது. இந்தத் திருத்தத்தின் பிரகாரம்தான் இலங்கை 9 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன. அதாவது இலங்கை 9 துண்டுகளாக்கப்பட்டன. இதனால்தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் கையும் ஓங்கின. அதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமது தாயகம் என்று தமிழர்கள் உரிமை கோரின. இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் தமிழர்கள் இருக்கின்றார்கள். அதனால் தனிநாட்டுக் கோரிக்கை அன்று தொடக்கம் இன்று வரை வலுப்பெறுகின்றது.
13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்குச் சிக்கலுக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் மாகாண சபைகளுக்குக் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டாம் என்று நாம் கூறுகின்றோம்.
புதிய அரசமைப்பின் ஊடாக 13ஆவது திருத்தத்தில் உள்ள சிக்கலான விடயங்களுக்கு முடிவுகட்டப்பட வேண்டும். அதன்பின்னர்தான் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும்” – என்றார்.