ராம நவமி விழாவில் கோயிலில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி 36 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!
நாடு முழுவதும் நேற்று ராம நவமி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே, இதில் கலந்து கொள்ள அந்த கோயிலில் திரளான பக்தர்கள் குழுமி இருந்தனர்.
இந்த கோயில் வளாகத்திற்குள் படிக்கிணறு ஒன்று இருந்துள்ள நிலையில், அதன் மேல் காண்கிரீட் பலகை போட்டு மூடப்பட்டுள்ளது. ராம நவமி விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அந்த காண்கிரீட் பலகை மேல் நின்று கொண்டிருந்த போது, திடீரென அந்த பலகை இடிந்து விழுந்தது. அப்போது அதன் மேல் நின்று கொண்டிருந்த பக்தர்களும் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். எதிபாராத இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு காவல்துறையினர், மாவட்ட ஆட்சி நிர்வாகம் விரைந்து மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. சுமார் 50க்கும் மேற்பட்டோர் அங்கு நின்று கொண்டிருந்த நிலையில் இதுவரை 36 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவில், “இந்தூர் விபத்து சம்பவம் மனதுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது அங்குள்ள நிலைமை குறித்து முதலமைச்சர் @சிவ்ராஜ் சவ்ஹான் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணமும், மாநில அரசு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.