இன்ஸ்டாகிராமில் கானா பாட்டுக்கு கத்தியுடன் நடனமாடிய பள்ளி மாணவர்கள் – மன்னிப்பு கேட்க வைத்த போலீஸ்!
இன்ஸ்டாகிராமில் கானா பாட்டுக்கு கத்தியுடன் நடனமாடிய பள்ளி மாணவர்கள் சென்னை காவல்துறை அழைத்து அறிவுரை கூறியதன் அடிப்படையில் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
சமூக வலைதளத்தில் சினிமா பாடல்களுக்கும் கானா பாடல்களுக்கும் ஏற்றவாறு வீடியோக்களை பலர் பதிவிட்டு வருகின்றனர். லைக்ஸ் களுக்காக எல்லையை மீறி பலரும் சட்டத்திற்கு விரோதமான செயல்களை செய்து வீடியோ பதிவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை இது போன்ற செயல் தவறான வழிக்கு இட்டுச் செல்லும் அபாயமும் உள்ளது. அந்த வகையில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் கானா பாடல் ஒன்றுக்கு கத்தியை காட்டி நடனமாடி வீடியோ வெளியிட்ட விவாகாரம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த வீடியோ சென்னை காவல்துறை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்களையும் அழைத்து பெற்றோர் ,ஆசிரியர்கள் சேர்ந்து இதன் பின் விளைவுகள் குறித்து அறிவுரை செய்தனர்.
இதனை அடுத்து மூன்று மாணவர்களும் அந்த வீடியோவை நீக்கிவிட்டு இதுபோன்று பள்ளி மாணவர்கள் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்து மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.