ஏழுமலையானுக்கு உண்டியல் காணிக்கை கோடிக்கணக்கில் செலுத்திய பக்தர்கள்…எத்தனை கோடி தெரியுமா?
திருப்பதி பணக்கார கோவில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாளுக்கு உகந்த மாதம். அந்த மாதத்தில் பெரும்பாலானோர் பெருமாளை தரிசிக்க திருப்பதி செல்வார்கள். திருப்பதி என்றால் பெருமாள் மட்டும்தான் சிறப்பு என்றில்லை. திருப்பதியின் பிரமாண்டத்தைப் போலவே பல சிறப்புகளும் உள்ளன. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் திருப்பதி வந்து வழிபடுவது வழக்கம். வெறும் வழிபாட்டோடு நின்றுவிடாமல் பக்தர்கள் அனைவரும் தங்களால் முடிந்த அளவுக்கு காணிக்கையும் செலுத்தி செல்கின்றனர்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாறு காணாத வகையில் 2022-23ஆம் நிதியாண்டில் 1520 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 883 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. இதையடுத்து 2022-23ஆம் நிதியாண்டில் ஆயிரம் கோடி ரூபாய் வரை காணிக்கையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு மாதம் தோறும் ஏழுமலையான் கோயில் உண்டியலில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணமாகவும், நகைகளாகவும் பக்தர்கள் காணிக்கை அளித்து வந்தனர். இந்நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரே ஆண்டில் 1520 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, 2023-24ம் நிதி ஆண்டில் 4 ஆயிரத்து 411 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பட்ஜெட்டுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.