மத்திய அரசின் வாடகைத் தாய் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
மத்திய அரசின் வாடகைத் தாய் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வாடகை தாய் மூலம் குழந்தை பெற விரும்பிய திருநெல்வேலியைச் சேர்ந்த தம்பதி, அதற்கான சான்றிதழ் வழங்க மாவட்ட மருத்துவ வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், வாடகைத் தாய் சட்டத்தில் சான்றிதழ்களை பெறுவதற்கு மாவட்டம் தோறும் மருத்துவ வாரியம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தவிட்டார். கால சூழல் காரணமாக, IVF மையங்கள் காளான்களாக உருவெடுத்து உள்ளன. இவை நெறியற்ற முறையில் பரவி வருவதும் ஒரு உண்மை. இத்தகைய மையங்கள் காளான்கள் போல் பெருகுவதால் ஏற்படும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை நாடாளுமன்றம் நடைமுறை படுத்தியது எனவும் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டம் 2021, மற்றும் வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021 ஆகிய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதகவும் கூறினார்.
இந்நிலையில் இந்தச் சட்டங்கள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க விரும்பும் தம்பதிகள் தங்கள் குழந்தையைப் பெற்றெடுக்க அனுமதிக்கப்படுவதற்கு முன்பு பின்பற்ற வேண்டிய தொடர் நடைமுறைகளை விளக்குகிறது.வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள வயது மற்றும் பிற நிபந்தனைகளை தம்பதியினர் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வாடகைத்தாய் சட்டத்தின் பிரிவுகள் குறித்த விவாதம் உச்சநீதிமன்றத்தில் இருந்தபோதே, திரைத்துறையைச் சேர்ந்த நட்சத்திர தம்பதிகள், வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றதாக சுட்டிக்காட்டிக்காட்டினார், மேலும் வாடைகை தாய் சட்டங்களில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை அதிகாரிகளும், மாவட்ட மருத்துவக் குழு உறுப்பினர்களும் நன்கு அறிந்திருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதுகுறித்து நீதித்துறை அதிகாரிகளும் முழுமையாகத் தெரிந்திருக்கும் வகையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதி, மனுதாரரின் மனுவை மருத்துவ வாரியம் பரிசீலிக்கவும் உத்தரவிட்டார்.