சஜித் அணியில் ஒவ்வொரு எம்.பிக்கும் 20 கோடி ரூபா பேரம் பேசுகின்றாராம் ரணில்!
“சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அரசிடம் செல்வதாக வரும் போலிச் செய்திகளை உருவாக்கி நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியைப் பிளவுபடுத்தும் சதித்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார். எதிர்க்கட்சியின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 20 கோடி ரூபா வழங்கி பணத்துக்கேனும் தம் பக்கம் பெறுவதற்கு பேரம் பேசும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தெஹிவளையில் நேற்று நடைபெற்ற வட்டார கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பணமில்லாத இந்த அரசு, அரசின் பக்கம் இணைத்துக்கொள்வதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து முயற்சித்தாலும், அரசில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பணமில்லாமல் எதிர்க்கட்சியுடன் இணையத் தயாராக உள்ளனர் என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் பணத்துக்காகத் தமது சுயமரியாதையை தாரைவார்க்க மாட்டார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
2020 ஆம் ஆண்டு 6 மாத கால வயதான ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 54 ஆசனங்களை வழங்கி தேர்தல் வரலாற்றில் சாதனை படைக்க இந்நாட்டு மக்கள் உதவினார்கள் என்றும், எனவே 20 கோடி ரூபா அல்லது அதற்கு மேல் கொடுத்தாலும்,ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சலுகைகளுக்காகவோ வரப்பிரசாதங்களுக்காகவோ தங்கள் சுயமரியாதையை இழக்க மாட்டார்கள் என்றும், மக்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டார்கள் என்றும் சஜித் பிரேமதாஸ கூறினார்.
20 கோடி ரூபா அல்ல 50 ஆயிரம் கோடியேனும் இரைத்து முடிந்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவரை தன் பக்கம் இணைத்துக்கொள்ளுங்கள் பார்ப்போம் என தான் அரசுக்குச் சவால் விடுக்கின்றார் என்றும், இவ்வாறு மக்களுக்குத் துரோகம் இழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இவ்வாறு இணைத்துக் கொள்வதற்குப் பணமாக கறுப்புப் பணமும், பண்டோரா பத்திர பணமுமே பயன்படுத்தப்படுகின்றது என்றும், இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் சுட்டிக்காட்டினார்.