வெடுக்குநாரிஆலயத்தின் சிலைகளை சேதப்படுத்திய மூன்று தமிழ் இளைஞர்கள் கைது
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதி லிங்கேஸ்வர ஆலயத்தின் சிலைகளை சேதப்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்களை நெடுங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த இந்து ஆலயம் தொடர்பில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், அதன் சிலைகள் உடைக்கப்பட்ட போது, தொல்லியல் துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டை சுமத்தி உடனடியாக விசாரணை நடத்துமாறு பிரதேசவாசிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாணம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், தமிழ் எம்.பி.க்கள் இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினர்.
இதனிடையே, தொல்லியல் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கோவில் சிலைகளை உடைத்த இளைஞர்கள் குறித்து தகவல் கிடைத்து, நெடுங்கேணி பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, சம்பந்தப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி இரவு, இராஜாங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு, கோவிலில் உடைக்கப்பட்ட சிலைகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில், ஏப்ரல் 2 ஆம் திகதி (இன்று) சிலைகளை அழித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.