மும்பை இந்தியன்சை வீழ்த்தியது பெங்களூரு அணி.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 46 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 84 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். பெங்களூரு அணி சார்பில் கரண் சர்மா 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி, டூ பிளசிஸ் ஜோடி அதிரடியில் இறங்கியது. பந்துகள் சிக்சர், பவுண்டரிகளாக பறந்தன.
இருவரும் அரை சதமடித்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு விராட் கோலி, டூ பிளசிஸ் ஜோடி 148 ரன்கள் குவித்தது. டூ பிளசிஸ் 73 ரன்கள் எடுத்தார். இறுதியில், பெங்களூரு அணி 172 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
விராட் கோலி 49 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.