அரசுடன் எவரும் இணையலாம்! – ரணில் அழைப்பு
“அரசின் கதவு எந்நேரமும் திறந்தேயுள்ளது. அரசுடன் எவரும் இணையலாம்” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து சிலர் அரசு பக்கம் தாவவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இது புனைகதை என்றும், பணத்தையும் பதவியையும் கொடுத்து சிலரை வாங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார் என்றும் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தநிலையில் மேற்படி விடயம் தொடர்பில் ஜனாதிபதி கருத்துரைக்கும் போது,
“கட்சி அரசியலுக்கு அப்பால் நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி செயற்பட விரும்பும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணையலாம்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நாம் நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கிடையில் ஒற்றுமை மிகவும் அவசியம்.
இது கட்சியை வளர்க்கும் நேரமல்ல. நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் நேரம்.
எனவே, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து நாட்டுக்காகச் செயற்படவேண்டும்.
கடந்த காலங்களில் நடந்தது போல் கோடி ரூபா , அமைச்சுப் பதவிகள், சலுகைகள் வழங்கி எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை இந்த அரசு விலைக்கு வாங்கமாட்டாது.” – என்றார்.