புதிய நிலக்கரி சுரங்கங்களை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில், புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 6வது நிலக்கரி சுரங்க ஏலத்தில் தேர்வான 29 நிறுவனங்களுடன் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ள நிலையில், சுரங்கங்களின் நிலக்கரி விற்பனை தொடர்பான 7வது சுற்று ஏலம் கடந்த மார்ச் 29ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 106 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“புதிய நிலக்கரி திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தி விடும் . நிலக்கரி சுரங்கம் மூலம் காவிரி டெல்டாவை மத்திய அரசு அழிக்க முயற்சி செய்கிறது. கடலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருக்கும் 5 புதிய நிலக்கரி திட்டங்கள் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது. அந்த திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தித் தராது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதியளிக்க வேண்டும். அதன் மூலம் தமிழக மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். “என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ புதிய நிலக்கரி சுரங்கங்களை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள திருவாரூர், தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க அனுமதிக்கப்படாது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நாளை முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.