பிரதமர் மோடி நாளை சென்னை வருகை…மெரினாவிற்குப் பொதுமக்கள் செல்ல தடை
பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில், மெரினாவிற்குப் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாகத் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். நாளை சென்னை வரும் பிரதமர் சென்னை விமானநிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தைத் திறந்துவைக்கவுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தனி விமானம் மூலம் மதியம் 3 மணியளவில் வரும் பிரதமர், சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தைத் திறந்து வைக்கிறார். தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
பின்னர், மாலை 4 மணியளவில் சென்னை சென்ட்ரல் – கோவை இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலையும், தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
அதனைத்தொடர்ந்து, சென்னை பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்தம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததது. ஆனால் தற்போது அந்த பயணத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனால் நாளை மெரினாவிற்குப் பொதுமக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.