இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவை திறக்க முற்பட்ட போதைப் பயணி கைது..!
சமீப காலமாகவே விமான பயணிகள் பறக்கும் விமானத்தில் விதிமுறைகளை மீறி கலாட்டாக்களில் ஈடுபட்டு சகபயணிகளை அச்சுறுத்தலில் ஆழ்த்தும் சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவை திறக்க முற்பட்ட 40 வயது போதை நபரை போலீசார் கைது செய்தனர். அந்த இன்டிகோ 6E 308 விமானம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 7.56 மணிக்கு புறப்பட்டது.
குறிப்பிட்ட அந்த விமானத்தில் மதுபோதையில் பயணித்த பிரதீக் என்பவர், அவசர கால கதவை திறக்க முற்பட்டு, சக பயணிகளுக்கு அச்சமூட்டியதாக கூறப்படுகிறது. பெங்களூருவில் காலை 10.43 மணிக்கு விமானம் தரையிறங்கியதும், அவர் மத்திய தொழில் பாதுகாப்புப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கான்பூரைச் சேர்ந்த பிரதீக்குக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர் மது போதையில் இருந்தது உறுதியானது. இவர் தனியார் இ காமர்ஸ் நிறுவனத்தில் மார்கெட்டிங் எக்சிக்யூடிவாக பணியாற்றி வருகிறார். கைது செய்யப்பட்ட பிரதீக் மீது 3 பிரிவுகளில் கீழ் விமான நிலைய போலீசார் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.