‘மொட்டு’வின் ஆட்சிதான் இன்றும் தொடர்கின்றது! – புதிய ஜனாதிபதி, பிரதமருடன் வீறுநடை என்கிறார் மஹிந்த
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியே இன்னமும் தொடர்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்முடனேயே உள்ளார். இந்த ஆட்சியை எவராலும் அசைக்க முடியாது. ஆட்சிக் கவிழ்ப்புக்கு இங்கு ஒருபோதும் இடமில்லை.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மொட்டுவின் ஆட்சியில் ஜனாதிபதியும், பிரதமரும்தான் பதவி விலகினார்கள். ஆனால், புதிய ஜனாதிபதி, புதிய பிரதமருடன் ‘மொட்டு’ ஆட்சி இன்னமும் தொடர்கின்றது.
ரணில் விக்கிரமசிங்க, தினேஷ் குணவர்த்தன ஆகிய இருவரும் எனது சிறந்த நண்பர்கள். ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை வகிக்கும் அவர்களுக்கு எமது கட்சியின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன எமது கட்சியின் மூத்த உறுப்பினர். அவரின் பதவியை நாம் பறிக்கவுள்ளதாக சில ஊடகங்கள் விஷமத்தனமான பொய்ச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதற்குப் பின்னால் எதிர்க்கட்சியினர் உள்ளனர்.” – என்றார்.