தங்கத்தை ஸ்க்ரூக்களாக மாற்றி துபாய் டூ ஹைதராபாத் கடத்தல் – சிக்கிய பயணி
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கத்தை கடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவி தங்கத்தை கடத்திவிடலாம் என எண்ணி வித்தியாசமாக யோசித்து கடத்தல்காரர்கள் தங்கத்தை கடத்துகிறார்கள். விமான நிலையத்தில் இருக்கும் நமது ஸ்ட்ரிட் ஆபிசர்கள் கடத்தல்காரர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிவிடுகிறார்கள். நீங்கள் படத்தில் பார்ப்பது எல்லாம் சாதாரண ரகம் அதற்கே வாயடைத்துபோகிறீர்கள் என்றால் தினம் தினம் எங்களிடம் பிடிபடும் சம்பவத்தை கேட்டால் மிரண்டு போவீர்கள் என ரியாக்ட் செய்கிறார்கள் அதிகாரிகள்.
ஹைதராபாத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 453 கிராம் தங்க ஸ்குரூக்களை கைப்பற்றி இருக்கிறார்கள். துபாயில் இருந்து ஹைதராபாத் வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்திருந்த ட்ராலி பேக்கில் பொருத்தப்பட்டிருந்த ஸ்குருக்குள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அந்தப்பயணியின் ட்ராலி பேக்கை வாங்கிய அதிகாரிகள் அதில் இருந்த ஸ்குரு ஒன்றை கழற்றி சோதனை செய்தனர். அது தங்கத்தால் ஆன ஸ்குரூ என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பேக்கை முழுவதுமாக திறந்து சோதனை மேற்கொண்டதில் அதில் பொருத்தியிருந்த அத்தனை ஸ்குரூக்களும் தங்கத்தால் ஆனது என்பது தெரியவந்தது.
அந்த வகையில் அந்த நபரிடம் இருந்து சுமார் 453 கிராம் எடையுள்ள தங்க ஸ்குரூ-க்களை அதிகாரிகள் கைப்பற்றினர். தங்கத்தை ஸ்க்ரூக்களாக மாற்றி கடத்திய குற்றத்திற்காக அவரை கைது செய்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் மேலும் விசாரணை நடத்துகின்றனர்.