மனைவியைக் கடத்திச் சென்ற கணவனை தேடுகிறது போலீஸ் குழு
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் முறிந்த நிலையில் சிலாபம் ஹலவத்த முனுவங்கம பிரதேசத்தில் உள்ள பெற்றோரின் வீட்டிற்கு திரும்பி வந்து தங்கியிருந்த பெண் ஒருவரை அவரது கணவர் உள்ளிட்ட ஒரு குழுவினர் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்டவர் சிலாபம் ஹலவத்த மனுவாங்கம பிரதேசத்தில் உள்ள பெற்றோரின் வீட்டில் தங்கியிருந்த 18 வயதுடைய திருமணமான பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பான கடத்தல் கடந்த 19ஆம் திகதி காலை இடம்பெற்றதாகவும், கடத்தப்பட்ட யுவதியின் திருமணமான கணவர் உட்பட ஐவர் அடங்கிய குழுவொன்று கடத்தலுக்கு வந்ததாகவும் ஹலவத்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடத்தப்பட்ட பெண் ஹலவத்தை பிரதான பாடசாலையொன்றில் கல்வி கற்கும் போது, கற்பித்தல் வகுப்புகளுக்குச் சென்றுகொண்டிருந்த காலத்தில் சந்தித்த இளைஞன் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதனால் தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள காதலனின் பெற்றோர் வீட்டிற்கு இரகசியமாக ஓடிச் சென்று மணமுடித்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது.
எனினும், இந்த இளைஞன் திருமணம் செய்து கொண்ட இந்த பெண்ணுடன், சில மாதங்களே ஒன்றாக வாழ்ந்ததாகவும், பின்னர் பெண்ணை மணமுடித்த 19 வயது இளம் கணவனின் துன்புறுத்தல்களை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என அவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ எண்ணி , தனது நிலைமை குறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்தி அவர்களின் ஆலோசனையின் பேரில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி திருமணமான கணவருடன் கண்டிக்கு வந்ததாகவும் , அதன் பின்னர் கணவனை தவிர்த்துவிட்டு பெற்றோருடன் அவர் ஹலவத்த மனுவாங்க வீட்டிற்கு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இவர் தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த போது, குறித்த திருமணம் செய்த கணவன், ஒரு குழுவுடன் வந்து பிரிந்திருந்த மனைவியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடத்தப்படும் போது பெண்ணின் தாயார் மாத்திரமே வீட்டில் இருந்ததாகவும், கடத்தப்பட்ட பெண் கதறிக் கொண்டிருந்த போது தாயையும் இந்த குழு தாக்கிவிட்டு பெண்ணை கடத்திச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இளம் பெண்ணை கடத்திய அவரது கணவர் மற்றும் குழுவினரைக் கண்டுபிடிக்க ஹலவத்த தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.