ஐ.எம்.எப். உடன்படிக்கையை ஆதரிக்கமாட்டோம்! – சபையில் கம்மன்பில தெரிவிப்பு.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்குத் தீர்வுகள் எதுவும் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் இல்லை என்றும், இதனால் அந்த உடன்படிக்கையை தாம் ஆதரிக்கப் போவதில்லை என்றும் அரசில இருந்து எதிர்க்கட்சியில் சுயாதீனமாக இயங்கும் குழுவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் (26) நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காமாலேயே இந்த விவாதம் நடைபெறுகின்றது.
2022 செப்டெம்பர் மாதத்தில் அதிகாரிகள் மட்டத்தில் உடன்படிக்கை செய்யப்பட்ட போது அதனை முன்வைக்குமாறு கோரினோம். ஆனால், முழுமையான உடன்படிக்கை இறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அதனைச் சமர்ப்பிப்பதாகக் கூறினாலும் இன்னும் அதனை முன்வைக்கவில்லை.
சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்வது தொடர்பில் 2021 செப்டெம்பரில் முதலில் நானே அமைச்சரவையில் கருத்துக்களை முன்வைத்தேன். அப்போது வாசுதேவ நாணயக்கார மட்டுமே அதனை எதிர்த்தார். ஆனால், இன்று நாங்கள் இந்த யோசனையை எதிர்க்கின்றோம். இதற்குக் காரணங்கள் உள்ளது.
நாங்கள் டொலரைப் பெற்றுக்கொள்வதற்காகவே சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்ல வேண்டும் என்று கூறினோம். ஆனால், ரூபா நெருக்கடிக்கே இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக தீர்வு முன்வைக்கப்படுகின்றது. டொலர் நெருக்கடிக்கான தீர்வே அவசியமாகும்.
கடனைச் செலுத்த முடியாது போனமையே நாங்கள் நெருக்கடிக்குள் தள்ளப்படக் காரணமாக அமைந்தது. இதற்காக டொலரைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இது தொடர்பான வேலைத்திட்டங்கள் இதில் இல்லை.
இப்போதைய நிலைமையில் இன்னும் கடன் பெற்றுக்கொண்டு கடன்காரனாக மாறுவதே நடக்கும். இதன்மூலம் நெருக்கடிகளுக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை.
இதனால் நாட்டை மேலும் மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் வகையிலான இந்த உடன்படிக்கையை நாங்கள் எதிர்க்கின்றோம்.” – என்றார்.