பாடசாலை பகல் உணவு விநியோகம் நிறுத்தப்படும் அபாயம்! – சபையில் அநுர எச்சரிக்கை.
உணவு விநியோகஸ்தர்களுக்கான கொடுப்பனவுகளை முறையாக வழங்காமையால் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பகல் உணவு வேலைத்திட்டம் நிறுத்தப்படும் அபயாம் ஏற்பட்டுள்ளது என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை கல்வி அமைச்சரிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதன்போது அநுரகுமார எம்.பி. மேலும் கூறுகையில்,
“நாட்டில் தற்போது பாடசாலைகளுக்குப் பகல் உணவு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உணவு விநியோகஸ்தர்களுக்குத் தேவையான நிதி வழங்காமையே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இதனால் பாடசாலைகளுக்கான உணவு விநியோகம் நிறுத்தப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று பெற்றோர் தெரிவிக்கின்றனர். உணவு வழங்கப்படாது என்று அரசு தீர்மானிக்காவிட்டாலும் தானகவே அது நிறுத்தப்படும் அபாயம் நிலவுகின்றது.
அதேவேளை, 4 ஆயிரத்து 800 பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிக்கப்படவில்லை. நேர்முகப் பரீட்சையை நடத்தி அவற்றுக்கான அதிபர் நியமனங்களை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்ட போதும் அது தொடர்பான நடவடிக்கைகளில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் சில கேள்விகளை அரசிடம் எழுப்புகின்றோம். பாடசாலைகளுக்கான உணவு விநியோகத்தை முறையாக முன்னெடுக்க அரசு முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன? அதிபர் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளின் அதிபர் நியமனங்களை எப்போது செய்யப் போகின்றீர்கள்? என்று கேட்கின்றோம்” – என்றார்.