துருக்கி நடத்திய தேடுதல் வேட்டை – வசமாக சிக்கிய ஐஎஸ்ஐஎஸ் தலைவன் உயிரிழப்பு !
ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹூசைன் அல் குரேஷியை துருக்கி புலனாய்வு படைகள் கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் அறிவித்துள்ளார்.
துருக்கி புலனாய்வு படைகள் நேற்று நடத்திய சிறப்பு தேடுதல் வேட்டையின் போது கொல்லப்பட்டான் என்று எர்டோகன் அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். நீண்ட காலமாக ஐஎஸ்ஐஎஸ் தலைவரை தேடும் பணிகளில் துருக்கி புலனாய்வு துறை ஈடுபட்டு வந்துள்ளது.
சிரியாவின் வடக்கில் உள்ள ஜாந்தாரிஸ் எனும் நகரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் துருக்கி கிளர்ச்சி பிரிவுகள் கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் இந்த பகுதியில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை நள்ளிரவு துவங்கிய மோதல் ஞாயிற்று கிழமை வரை தொடர்ந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற மோதலின் இறுதியில் பயங்கர வெடிப்பு சத்தத்தை கேட்டோம் என்று அந்த பகுதியில் வசிக்கும் உள்ளூர்வாசி தெரிவித்துள்ளார். தாக்குதலை தொடர்ந்து பொது மக்கள் இந்த பகுதிக்குள் நுழையாமல் இருக்க பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐஎஸ்ஐஎஸ் முன்னாள் தலைவர் சிரியாவின் தெற்கு பகுதியில் கொல்லப்பட்டதை அடுத்து அல் குரேஷி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.