ஐக்கிய மக்கள் கட்சியிலிருந்து ராஜிதவை உடன் வெளியேற்றுக! – சஜித்துக்கு அழுத்தம்.
“அரசுடன் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கும் ராஜித சேனாரத்னவைத் தொடர்ந்தும் கட்சிக்குள் வைத்திருந்தால் கட்சிக்கு ஆபத்து. அவரை உடனே நீக்க வேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குத் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர் கட்சியின் முக்கியஸ்தர்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அரசுடன் இணைய வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கூறி வருகின்ற ராஜித சேனாரத்ன அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி இதே கருத்தைப் பகிரங்கமாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து கட்சிக்குள் ராஜிதவுக்கு எதிர்ப்புக்கள் கிளம்பின.
“ராஜித விரும்பினால் அரசுடன் இணையட்டும். ஆனால், கட்சிக்குள் இருந்துகொண்டு கட்சி அலுவலகத்தைப் பயன்படுத்தி இவ்வாறான கருத்துக்களை அவர் வெளியிடக்கூடாது” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் விசனம் தெரிவித்தனர்.
ராஜிதவைக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கட்சியின் முக்கியஸ்தர்கள் – உறுப்பினர்கள் எனப் பலரும் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் வலியுறுத்தினர்.
அதையடுத்து ராஜிதவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை மேற்கொள்ளுமாறு கட்சி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாசீம், திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் லக்ஸ்மன் கிரியெல்ல உள்ளிட்ட ஒழுக்காற்றுக் குழுவிடம் பொறுப்பை ஒப்படைத்தார் சஜித்.
ரஞ்சித் மத்தும பண்டாரவின் வீட்டில் விசாரணை ஏற்பாடு செய்யப்பட்டது. விசாரணைக்கான அழைப்பை விடுத்ததும் அழைப்பை ஏற்று உடனே ஆஜராகி தனது விளக்கத்தை வழங்கினார் ராஜித.
அந்த விளக்கம் எவ்வாறு இருப்பினும், அரசுடன் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கும் அவரைத் தொடர்ந்தும் கட்சிக்குள் வைத்திருந்தால் கட்சிக்கு ஆபத்து என்றும், அவரை உடனே நீக்க வேண்டும் என்றும் கட்சிக்குள் இருந்து தொடர்ந்தும் தலைவர் சஜித்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது என அறியமுடிகின்றது.