ஐக்கிய மக்கள் சக்தியுடன் சேரும் மொட்டுக் கட்சியின் 15 எம்.பிக்கள்?
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரசுடன் இணையப் போகின்றார்கள் என்று தொடர்ச்சியாகக் கூறப்பாடலும்கூட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பக்கம் இருந்து 15 பேர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
அவ்வாறு இணையவுள்ள 15 எம்.பிக்களில் நால்வருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு – 07 இல் உள்ள இரு தரப்புக்கும் நன்கு பரிச்சயமான ஒருவரின் இல்லத்தில்தான் அந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
விரைவில் தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றும், அதனையொட்டி அரசுக்குள் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன என்றும் அந்த நால்வரும் சஜித்திடம் கூறியுள்ளனர்.
15 பேரும் நேராக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையப் போகிறீர்களா அல்லது கூட்டணியாக இணையப் போகிறீர்களா என்று 15 பேரும் கூடிப் பேசி ஒரு முடிவை எடுங்கள் என்று அவர்களிடம் சஜித் தெரிவித்துள்ளார்.
ஒன்றரை மணிநேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு இரவு விருந்துடன் நிறைவு பெற்றது. அடுத்த சந்திப்புக்கான திகதியும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது என்றும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.