கர்நாடகத் தேர்தல் மட்டுமல்ல… இடைத்தேர்தல்களிலும் பாஜக பின்னடைவு!
பஞ்சாப் மக்களவைத் தொகுதி, ஒடிசா, உத்தர பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்று வருகிறது.
கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நண்பகல் மணி நிலவரப்படி காங்கிரஸ்- 117, பாஜக-75, மஜத -25, பிற கட்சிகள்- 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன. பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் நீண்ட நேரமாக முன்னிலையில் இருந்து வருவதால் அக்கட்சி ஆட்சியமைக்கும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் இன்று பஞ்சாபில் ஜலந்தர் மக்களவைத் தொகுதிக்கும், ஒடிசாவில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் உத்தர பிரதேசத்தில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது.
பஞ்சாபில் ஜலந்தர் மக்களவைத் தொகுதியில் 47,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
உத்தர பிரதேசத்தில் சான்பே(Chhanbey) சட்டப்பேரவைத் பேரவைத் தொகுதியில் சமாஜவாதி கட்சியும், சுவார்(Suar) தொகுதியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அப்னா தளம் கட்சியும் முன்னிலையில் உள்ளது.
ஒடிசாவின் ஜார்சுகுடா(Jharsuguda) சட்டப்பேரவைத் தொகுதியில் பிஜு ஜனதா தளம் முன்னிலையில் இருந்து வருகிறது.