சபரிமலையில் புதிய சர்ச்சை: பொன்னம்பலமேடு பகுதியில் அத்துமீறி நுழைந்து பூஜை நடத்திய தமிழக நபர்

கேரள மாநிலம், சபரிமலை அருகில் உள்ள பொன்னம்பலமேடு பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நபர் அத்துமீறி நுழைந்ததால் அந்த மாநிலத்தில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய விடியோ காட்சியில் ஒருநபர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 4 கி.மீ. தொலைவில் உள்ள பொன்னம்பலமேடு பகுதியில் உள்ள மேடையில் அமர்ந்திருக்கிறார். மந்திரங்களை உச்சரிக்கும் அவர் சில பூஜை சடங்குகளைச் செய்கிறார்.அந்த நபரைத் தவிர மேலும் நான்கு பேர் அந்தக் காட்சியில் இடம்பெற்றுள்ளனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட சபரிமலை கோயிலின் படங்களும் அந்தக் காணொலியில் உள்ளன.

ஐயப்ப பக்தர்களைப் பொருத்தவரை பொன்னம்பலமமேடு பகுதி மிகவும் மதிக்கப்படும் புனிதமான இடமாகும். ஐயப்பன் கோயில் யாத்திரையின் நிறைவாக அப்பகுதியில்தான் மகர விளக்கு ஏற்றப்படுகிறது.அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியான பொன்னம்பலமேடு, கேரள மாநில வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பொன்னம்பலமேடு பகுதியில் சிலர் அத்துமீறி நுழைந்த விவகாரம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத் தலைவர் கே.அனந்தகோபன் கூறியதாவது:

இது ஐயப்ப பக்தர்களுக்கு உணர்வுபூர்வமான பிரச்னையாகும். இந்த விவகாரம் தொடர்பாக மாநில காவல் துறைத் தலைவரிடமும் வன விலங்குகள் நலத் துறைத் தலைவரிடமும் விரைவில் புகார் அளிப்போம்.

சம்பந்தப்பட்ட காணொலியில் இடம்பெற்றுள்ள நபர் நாராயணசாமி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். சபரிமலை கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் கீழ்சாந்திக்கு தற்காலிக உதவியாளராக அவர் பணிபுரிந்தார். மோசமான நடத்தை காரணமாக அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் உள்ளிட்ட நபர்கள் மிகவும் பாதுகாக்கப்பட்ட பொன்னம்பலமேடு பகுதியில் எவ்வாறு அத்துமீறி நுழைய முடிகிறது? இதற்கு வனத் துறை அதிகாரிகளே பொறுப்பு. அவர்கள் வேறு மார்க்கத்தில் அந்த இடத்துக்கு வந்திருக்கலாம் என்று வனத் துறை கூறுவதை ஏற்க முடியவில்லை.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் புனிதத்தைக் கெடுப்பதற்காகவே அந்த நபர் இவை அனைத்தையும் திட்டமிட்டுச் செய்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பொன்னம்பலமேடு பகுதியில் அவர் நுழைந்தது நான்கு தினங்களுக்கு முன் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், சம்பவம் நிகழ்ந்த தேதியை உறுதிப்படுத்த முடியவில்லை என்றார்.
இதனிடையே, வனத் துறை வட்டாரங்கள் கூறுகையில், “இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன்விசாரணை நடந்து வருகிறது’ என்று தெரிவித்தன.

Leave A Reply

Your email address will not be published.