பாராளுமன்றத்தை பார்வையிட வடக்கில் இருந்து 700 மாணவர்கள் வருகை.
யாழ்ப்பாணத்தில் உள்ள பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் அண்மையில் (12) பாராளுமன்றத்தை பார்வையிட வருகை தந்திருந்தனர்.
மாணவர்கள் பாராளுமன்றத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் சேவை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். பாராளுமன்றத்தின் கலரியிலிருந்து சபா மண்டபத்தில் நடைபெறும் செற்பாடுகளைப் பார்வையிட மாணவர்களுக்கு வாய்ப்புப் கிடைத்ததுடுன், பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்புறமாக குழுப் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டனர்.
இதன்போது பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ துஷ்மந்த மித்திரபால, கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ உத்திக பிரேமரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மற்றும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து ஆகியோரைச் சந்திப்பதற்கான வாய்ப்பும் இம்மாணவர்களுக்குக் கிடைத்தது.
வடமராட்சி பெண்கள் மத்திய கல்லூரி, தொண்டமனாறு வீரகத்திப்பிள்ளையார் மகா வித்தியாலயம், வல்வை மகளிர் மகா வித்தியாலயம், நெல்லியடி மகா வித்தியாலயம், பொலிகண்டி இந்து கலவன் பாடசாலை, உடுப்பிட்டி மகளிர் வித்தியாலயம், விக்னேஸ்வரா கல்லூரி, கரவட்டி வேலாயுதம் மகா வித்தியாலயம், வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி, மெதடிஸ் பெண்கள் பாடசாலை, கொற்றவற்றை பாடசாலை ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவியரே பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்தனர்.
கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பொது மக்கள் கலரியானது கடந்த செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்காகத் திறக்கப்பட்டதையடுத்து, தீவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகை தந்துள்ளனர். இவ்வாறு வருகைதரும் மாணவர்களுக்கான ஏற்பாடுகளை படைக்கலசேவிதர் திணைக்களம் வழங்குவதுடன், பார்வையிடுவதற்கான சுற்றுலா, செயலமர்வுகளை ஏற்பாடு செய்வது அவற்றுக்குத் தேவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் என்பன பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் வழங்கப்படுகிறது.