மணிப்பூரில் மீண்டும் வன்முறை…அமைச்சரின் வீட்டுக்கு தீ வைப்பு!
மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்தி இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு நாகா மற்றும் குகி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதன் காரணமாக இம்மாத தொடக்கத்தில் மணிப்பூரின் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. 70க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பல சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன.
சில நாட்கள் அமைதி திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் சில இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. பிஷ்ணுபூர் (Bishnupur) மாவட்டத்தில் உள்ள பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் கோவிந்தாஸின் வீட்டை வன்முறையாளர்கள் தீவைத்து எரித்தனர். நல்வாய்ப்பாக அப்போது அமைச்சரும், அவரது குடும்பத்தினரும் அங்கு இல்லை.
உள்ளூர் மக்களை போராட்டகாரர்களிடமிருந்து காப்பாற்றவில்லை என ஆதங்கத்தில் பெண்கள் அமைச்சர் வீட்டை தீயிட்டு எரித்துள்ளனர்.
சிங்டா கடாங்பந்த் (Singda Kadangband) பகுதியில் வன்முறையாளர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் ஒருவர் காயமடைந்ததாவும், அவர் ரிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மணிப்பூருக்கான பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் கூறினார். மேலும் ஏராளமான ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். நிலைமை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.