உக்ரைனுடனான போர் பல ஆண்டுகள் நீடிக்கும்.
நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் பெரும் முயற்சி எடுத்து வந்தது. இதனை விரும்பாத ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடக்கம் முதலே இருந்து வருகின்றன.
அதன்படி ரஷியா மீது பொருளாதார தடை, உக்ரைனுக்கு ஆயுதம் சப்ளை போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் அந்த நாடுகள் ஈடுபடுகின்றன. இதற்கு பதிலடியாக ரஷியாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதித்து வருகிறது.
15 மாதங்களை தாண்டியும் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உலக பொருளாதாரத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை.
அதற்கு மாறாக இரு தரப்பினரும் ஏவுகணை தாக்குதல் உள்ளிட்ட தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ரஷ்யாவின் தெற்கு நகரமான கிராஸ்னோடரில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கு பதிலடியாக உக்ரைனின் டினிப்ரோ நகரம் மீது ரஷியாவும் டிரோன் தாக்குதல் நடத்தியது.
இதில் அந்த நகரின் பல பகுதிகள் சேதமடைந்தன. இந்த நிலையில் வியட்நாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவர் டிமிட்ரி மெட்வடேவிடம் உக்ரைன் போர் நிலவரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து அவர் பேசுகையில், உக்ரைன் போர் மிக நீண்ட காலத்துக்கு அதாவது பல தசாப்தங்கள் நீடிக்கலாம் என்றும், ஒருவேளை போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் மீண்டும் போர் தொடரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் நாடுகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.