பழுது பார்க்க நின்றிருந்த காரில் அழுகிய நிலையில் 7 வயது சிறுவன் உடல்
சேலம் புறவழி சாலையில் இயங்கி வரும் பட்டறை ஒன்றில் பழுது பார்க்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து அழுகிய நிலையில் சிறுவன் உடல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் – சென்னை புறவழிச் சாலையில் அம்மாபேட்டை ரஷ்யா நகர் பகுதியில் மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான கார் பழுதுபார்க்கும் பட்டறை உள்ளது. பட்டறையின் உரிமையாளர் மாணிக்கம் வீட்டு விசேஷம் காரணமாக கடந்த ஒரு வார காலமாக பட்டறைக்கு விடுமுறை விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கார் ஒன்றின் உரிமையாளர் அவசரமாக கார் தேவை என்று கூறியதால் இரவு எட்டு மணி அளவில் பட்டறைக்கு வந்த மாணிக்கம் சம்பந்தப்பட்ட காரை திறக்க முற்பட்டபோது காரில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதையடுத்து உடனடியாக அம்மாபேட்டை போலீசாருக்கு மாணிக்கம் தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் காரை சோதனை செய்தபோது உள்ளே சிறுவன் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறையினர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது காரில் உயிரிழந்து கிடந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்த சுகன்யா என்பவரின் ஏழு வயது மகன் சிலம்பரசன் என்பது தெரிய வந்தது.
முதல் கணவர் சிறையில் உள்ள நிலையில் இரண்டாவது கணவனோடு அப்பகுதியில் வசித்து வந்த சுகன்யா பிள்ளைகள் மீது போதிய அக்கறை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சுகன்யாவிடம் காவல்துறையினர் விசாரித்த போது கடந்த நான்கு நாட்களாக மகனை காணவில்லை என்றார்.
கடந்த ஒரு வார காலமாக பட்டறைக்கு விடுமுறை என்ற போதிலும் சுற்றுச்சுவர் ஏதுமின்றி திறந்தவெளியில் செயல்பட்டு வரும் இந்த பட்டறையில் 20க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கார் சாவி கூட இருக்காத நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினுள் விளையாட்டுத்தனமாக சிறுவன் ஏறியவுடன் கார் சென்டர் லாக் ஆகியதால் சிறுவன் வெளியேற முடியாத நிலையில் மூச்சுத்திணறி உயிரிழந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தடையியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களும் பதிவு செய்யப்பட்டன.