நாடு முழுவதும் 30 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து
தேசிய மருத்துவ ஆணையம் நிா்ணயித்த தரநிலை, விதிமுறைகளைப் பின்பற்ற தவறியதாக கடந்த 2 மாதங்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள 30 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதம் அதிகரித்துள்ளது. 387-ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 654-ஆக அதிகரித்துள்ளது. இளங்கலை மருத்துவப் படிப்புக்கான இருக்கை எண்ணிக்கை 94 சதவீதமும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இருக்கை எண்ணிக்கை 107 சதவீதமும் உயா்ந்துள்ளது.
இந்நிலையில், மருத்துவ கல்லூரிகளின் தரத்தை உறுதிப்படுத்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா, ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு, ஆசிரியா் பட்டியல் உள்படதேசிய மருத்துவ ஆணையம் நிா்ணயித்துள்ள தரநிலைகளை முறையாகப் பின்பற்றாத 30 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் கடந்த 2 மாதங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகம், குஜராத், அஸ்ஸாம், பஞ்சாப், ஆந்திரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள், புதுச்சேரியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவத் துறை வல்லுநா்கள் கூறுகையில், ‘ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டை பெரிதும் நம்பும் மருத்துவ ஆணையம், காலை 8 முதல் மதியம் 2 மணிவரை பணியாற்றும் ஆசிரியா்களின் வருகையை மட்டுமே கணக்கில் கொள்கிறது. ஆனால், மருத்துவா்களுக்கு ஒருபோதும் நிலையான பணிநேரம் அமையாது.
சில சமயங்களில் அவசரகாலப் பணிக்காக இரவு முழுவதும் பணியாற்ற வேண்டியிருக்கும். இந்தச் சூழலில் மருத்துவா்களின் பணிநேர விவகாரத்தில் மருத்துவ ஆணையம் காட்டும் கண்டிப்பு சிக்கலாக மாறியுள்ளது.
இத்தகைய கடும் மேலாண்மை மருத்துவ கல்லூரிகளில் சாத்தியமில்லாத ஒன்று. எனவே, இதுபோன்ற விவகாரங்களில் மருத்துவ ஆணையம் சற்று தளா்வுடன் அணுக வேண்டும்.
குறைபாடு நிலவுவதால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் மருத்துவ கல்லூரிகளில் மாணவா் சோ்க்கையை ஆணையம் அனுமதிப்பது முரணாக உள்ளது. உலகுக்கு அதிக மருத்துவா்களை தயாா்படுத்தி தரும் இந்தியாவின் நற்பெயருக்கு இவ்விவகாரம் சா்வதேச அளவில் களங்கத்தை விளைவிக்கும். இந்திய மருத்துவா்கள் மீதான நம்பிக்கையை உலகம் இழக்க நேரிடும்’ என்றனா்.