அரசமைப்பின் ’20’ இற்கு எதிராக அரசுக்குள்ளேயே போர்க்கொடி!
அரசமைப்பின் ’20’ இற்கு எதிராக
அரசுக்குள்ளேயே போர்க்கொடி!
– திருத்தங்களை மேற்கொள்ள முடிவு
நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின்போது அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசு உத்தேசித்துள்ளது என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும், அரசில் பலர் இந்தத் திருத்தத்தில் உள்ள சில சரத்துக்கள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இரட்டைக் குடியுரிமை, கணக்காய்வு ஆணைக்குழு, அமைச்சரவையின் வரையறை போன்றவை இதில் அடங்குகின்றன.
அரசைப் பொறுத்தவரையில் 20ஆவது திருத்தம் தொடர்பில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மாற்றுக் கருத்துக்களை இதுவரை பதிவு செய்துள்ளனர்
20ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்வது அவசியம்.
இந்தநிலையில், குறித்த உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.