இடைக்கால நிர்வாக சபை பேச்சு திருப்தியளிக்கின்றது! – விக்னேஸ்வரன் கருத்து.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இடைக்கால நிர்வாக சபையை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் திருப்தியளித்ததாகத் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுடன் நேற்று நடந்த சந்திப்பின் பின் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல்கள் காலவரையின்றிப் பின்தள்ளப்பட்டு வரும் நிலையிலும், மாகாண அதிகாரங்கள் கணிசமாகப் பிடுங்கப்பட்டுள்ள நிலையிலும், இடைக்கால நிர்வாக சபை ஒரு சாதகமான உத்தி என்று விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த நிர்வாக ஏற்பாடு உருவாக்கப்பட்டால் பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறுவதை முதன்மைச் செயன்முறையாக கொண்டிருக்கும் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.
இந்தச் சந்திப்பின் போது, காலத்தை இழுத்தடிக்கும் உத்தியாக பேச்சை நடத்துகிறீர்களா? இவற்றை நிறைவேற்ற முடியுமென்றால் மாத்திரம் பேச்சைத் தொடருங்கள். அல்லது இப்பொழுதே பேச்சை கைவிட்டு விடலாமெனத் தான் குறிப்பிட்டதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த யோசனை அருமையானது என்று குறிப்பிட்ட பிரதமர், இடைக்கால ஏற்பாட்டை உருவாக்குவதில் அரசு சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார் எனக் குறிப்பிட்ட விக்னேஸ்வரன் மீண்டும் பேச்சு இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.