பெலாரஸில் அடுத்த மாதம் முதல் அணுஆயுதங்கள் குவிக்கப்படும்: புதின்.
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. முதலில் உக்ரைனை எளிதாக நினைத்தது ரஷியா. சூழ்நிலை அவ்வாறு அமையவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி வருவதால் உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியபோது கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி, உக்ரைன் நாட்டிற்குள் ஊடுருவ பெலாரஸ் பகுதியை ரஷியப் படைகள் பயன்படுத்தியன. ஆயுதங்களையும் குவித்து வைத்தது. இந்த நிலையில் இன்று ரஷிய அதிபர் புதின், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை சந்தித்தார். அப்போது ஜூலை 7 அல்லது 8-ந்தேதிக்குள் தந்திரோபாய அணுஆயுதங்களை (tactical nuclear weapons) வைப்பதற்கான கட்டிட வேலைகள் முடிந்துவிடும்.
அதன்பிறகு விரைவாக அணுஆயுதங்கள் கொண்டு வந்து குவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். தந்திரோபாய அணுஆயுதங்கள் எதிரிகளின் துருப்புகள் மற்றும் ஆயுதங்களை அழிக்கவும் பயன்படுத்தப்படும். கண்டம் விட்டு கண்டம் தாண்டி பெரிய நகரத்தையே அழிக்கும் அணுஆயுதம் போன்று அல்லாமல், குறுகிய தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டவையாக இருக்கும். ஆனால், எவ்வளவு ஆயுதங்கள் பெலாரஸ்க்கு அனுப்பப்படும் என்பது குறித்து புதின் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், சுமார் 2 ஆயிரம் ஆயுதங்களை அனுப்பி வைக்கலாம் என அமெரிக்க அரசு நம்புகிறது. மேற்கத்திய நாடுகளை மிரட்டுவதற்காகத்தான் ரஷியா இந்த வேலைகளை செய்கிறது.
இதற்கு பெலாரஸ் அதிபர் உடன்போகிறார் என பெலாரஸ் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. நேட்டோ மாநாடு ஜூலை மாதம் வில்னியஸில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன் புதின் மற்றும் அவரது கைப்பாவையான லுகாஷென்கா ஆகியோர் பெலாரஸில் ஆயுதங்களை குவிக்க திட்டமிட்டுள்ளனர் என பெலாரஸ் நாட்டின் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.