ரஷ்யப் படைகள் மீது எதிர்த்தாக்குதல் நடத்தப்போவதை உறுதிசெய்த உக்ரேனிய அதிபர்.
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) முதல்முறையாக ரஷ்யப் படைகள் மீது எதிர்த்தாக்குதல் நடத்தப்போவதை உறுதி செய்திருக்கிறார்.
தற்காப்பு நடவடிக்கைகளும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் அது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.
நேற்று அதிகாலை (ஜூன் 10) ரஷ்யா உக்ரேன் முழுவதும் ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் பாய்ச்சியது.
ஒடேசா (Odesa) நகரில் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டனர்.
அதோடு மத்திய பொல்டாவா (Poltava) வட்டாரத்தில் அமைந்திருக்கும் ராணுவ விமானத் தளமும் தாக்கப்பட்டதாக கீவ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யா ஆக அண்மையில் நடத்தியிருக்கும் நள்ளிரவுத் தாக்குதல்கள் அவை.
அதற்கு எதிராக உக்ரேன் பெரும் எதிர்த் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த வார இறுதியில் கீவ் நகருக்குத் திடீர்ப் பயணம் மேற்கொண்ட கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவிடம் (Justin Trudeau) திரு. ஸெலென்ஸ்கி அதனைத் தெரிவித்தார்.
அண்மையில் ஹெர்சன் (Kherson) வட்டாரத்தில் மாபெரும் அணைக் கட்டு தகர்க்கப்பட்டதில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. அதனையடுத்து உக்ரேனுக்குச் சென்றிருக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் திரு. ட்ரூடோ.
மனிதாபிமான உதவியாக 7 மில்லியன் டாலருக்கும் மேல் வழங்க அவர் உறுதியளித்துள்ளார்.
ஏற்கனவே ராணுவ உதவியாக 300 மில்லியன் டாலர் வழங்கத் திரு. ட்ரூடோ ஒப்புக்கொண்டிருக்கிறார்.