தண்டனை பெற்ற பொலிஸ் அதிகாரியே கஜேந்திரகுமாரை மிரட்டினார்! – சிங்கள ஊடகவியலாளர் தகவல்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மருதங்கேணியில் அச்சுறுத்திய சிவில் உடையில் நின்றிருந்த பொலிஸ் அதிகாரி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றத்துக்காக ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரை பிஸ்ரலைக் காட்டி அச்சுறுத்தியதாகச் சொல்லப்படும் பொலிஸ் அதிகாரி, பொலிஸார் எடுத்த உள்ளக நடவடிக்கை ஒன்றுக்காக 2018 ஆம் ஆண்டு பொதுமக்கள் கூடும் பொது இடத்தில் தனது ரி–56 துப்பாக்கியை வைத்து போராட்டம் நடத்தியிருந்தார். அவர் சுடப்போவதாகவும் எச்சரித்திருந்தார். இதற்காக அவர் பின்னர் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவி வகித்தபோது மேற்படி பொலிஸ் அதிகாரிக்கு மீள் நியமனம் வழங்கியதுடன் அவருக்கு இழப்பீடாக ஒரு மில்லியன் ரூபாவும் வழங்கியிருந்தார் என்று சிங்கள ஊடகவியலாளரான ரங்க சிறில் தெரிவித்துள்ளார்.