வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு அம்மன் திருவிழாவுக்கு 40 படகுகளுக்கு அனுமதி! – யாழ். மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு.
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் பெருந்திருவிழா எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் குறிகாட்டுவானிலிருந்து நயினாதீவுக்கு 40 படகுகள் பயணிகள் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“நாகபூஷணி அம்மன் ஆலய பெருந்திருவிழாவுக்கு பயணிகள் பயணிப்பதற்கு ஏற்புடைய படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் கப்பற்துறை வணிக அமைச்சின் செயலகத்தில் இருந்து பெறபட வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் கச்சதீவு பெருநாளையொட்டி 21 படகுகள் பயணிகளின் பயணத்துக்கு ஏற்றன என்று அனுமதிக்கப்பட்டிருந்தன.
நயினாதீவு பெருந்திருவிழாவுக்கு இம்முறை மேலதிகமாக 21 படகுகள் விண்ணப்பித்திருந்த நிலையில் 19 படகுகளுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இரு படகுகளுக்கு திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் உற்சவகாலத்தில் 40 படகுகள் சேவையில் ஈடுபடும்.” – என்றார்.