இனப்பிரச்சினைக்கான தீர்வை நான் மட்டும் வழங்க முடியாது! – நழுவுகின்றார் ரணில்.

“நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக நான் ஆளும் தரப்பு பங்காளிகளுடனும், எதிரணியிலுள்ள கட்சிகளுடனும் கலந்து பேசாமல் எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாது. அரசியல் தீர்வு விவகாரம் சுலமான விடயம் அல்ல. அதை ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது சம்பந்தனோ எடுத்தவுடன் வழங்க முடியாது.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸூக்கு புறப்படுவதற்கு முன்னர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பேச்சு தொடர்பில் நம்பிக்கையீனத்தை உங்களுடனான சந்திப்பின் பின்னர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள்’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு,

“அரசியல் தீர்வு பேச்சு முன்னெடுக்கப்படும் நிலையில் ஆளும் தரப்பிலுள்ள கட்சிகளிடத்திலிருந்தும் எதிர்ப்புவரும். எதிரணியிலுள்ள கட்சிகளில் இருந்தும் எதிர்ப்புக்கள் வரும். தற்போதைய நாடாளுமன்றம் ஆளும் தரப்பிலும், எதிரணியிலும் பல கட்சிகளைக் கொண்டு அமைந்துள்ளது.

அரசியல் தீர்வு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமல்ல, அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த மூவின மக்களுக்கும் உரியது. எனவே, தீர்வு விவகாரப் பேச்சு வெற்றியடையும் என்று நம்புகின்றேன்.

சகல கட்சிகளுடனும் நாடாளுமன்றத்துக்குள்ளும் பேசி வெளியிலும் பேசி அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை விரைந்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.” – என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.