வன்னியில் ஒருவர் அடித்துப் படுகொலை!
முல்லைத்தீவு, மல்லாவி – பாலிநகர் – மூன்றுவாய்க்கால் வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூன்றுவாய்க்கால் வயல் பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சியைச் சேர்ந்த இளையதம்பி ராஜ்மோகன் (வயது 49) என அடையாளம் காணப்பட்டார்.
குறித்த நபர், துணுக்காய் விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போது காணாமல்போயிருந்தார் எனவும், இவர் ஏற்கனவே கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் நோய் ஒன்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
இதையடுத்து குறித்த சடலம், பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரியால் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது இறந்தவரின் தலையில் அடிகாயங்கள் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.