நீர்மூழ்கியில் டைட்டானிக் கப்பலை பார்க்கப் போன கோடீஸ்வரர்கள் என்ன ஆனார்கள்?
ஆழ்கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் ஆவல் விபரீதத்தில் முடிந்திருக்கிறது. 5 பேருடன் ஆழ்கடலுக்குள் சென்ற சிறிய சுற்றுலா நீர்மூழ்கி திடீரென காணாமல் போயிருக்கிறது.
அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படையும், தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன.
நீர்மூழ்கியில் 3 நாட்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருப்பில் உள்ளதாக மதிப்பிடப்பட்டிருப்பதால், 5 பேரையும் விரைந்து மீட்க வேண்டி மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காணாமல் போன நீர்மூழ்கியை கப்பல்கள், விமானங்கள் மூலம் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஹாலிவுட் சினிமா வடிவில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்ட ‘டைட்டானிக்’ கப்பல் நியூ ஃபவுண்ட்லாந்தின் செயின்ட் ஜான்ஸ் நகருக்குத் தெற்கே சுமார் 700 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிக் கிடக்கிறது. நூறாண்டுகளுக்கும் மேலாக ஆழ்கடலில் ஆழ்ந்த துயில் கொண்டிருக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் பார்ப்பதற்கென தனியாக சுற்றுலாவே நடத்தப்படுகிறது. அத்தகைய நிறுவனங்களில் ஒன்று ஓஷன்கேட் (Oceangate).
தற்போது, ஆழ்கடலில் காணாமல் போன சிறிய சுற்றுலா நீர்மூழ்கி அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான டைட்டன் என்ற நீர்மூழ்கி என்று கூறப்படுகிறது. ஒரு லாரி அளவிலான இந்த நீர்மூழ்கியில் 5 பேர் வரை பயணிக்க முடியும். அதில், வழக்கமாக 4 நாட்களுக்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.
ஆழ்கடலில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் இந்த சுற்றுலா 8 நாட்கள் கொண்டது. அதற்கு கட்டணமாக ஒருவருக்கு இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த நீர்மூழ்கியில் வழக்கமாக ஒரு பைலட், 3 சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் பயணிப்பார்கள்.
விபரீதத்தில் முடிந்த இந்த பயணம், நியூபவுண்ட்லாந்து கடற்கரையில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியுள்ளது.
பயணத்தை தொடங்கிய ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் அந்த நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
நீர்மூழ்கியில் உள்ள 5 பேரையும் பத்திரமாக மீட்க அனைத்து வாய்ப்புகளை பயன்படுத்தி வருவதாக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன்கேட் நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன், ஆழ்கடல் ஆய்வு நிறுவனங்கள் பலவும் இந்த மீட்புப் பணியில் கைகோர்த்துள்ளன.
காணாமல் போன நீர்மூழ்கி தனது பயணத்தை நியூபவுண்ட்லாந்தில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியிருந்த நிலையில், மீட்புப் பணிகள் மசாசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் நகரில் இருநது ஒருங்கிணைக்கப்படுகின்றன.
ஆக்சிஜன் இருக்க வாய்ப்பு
“நீர்மூழ்கியில் 70 முதல் 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பில் இருக்கலாம்” என்று அமெரிக்க கடலோர காவல்படையின் ரியர் அட்மிரல் ஜான் மாவ்கர் தெரிவித்தார்.
2 விமானங்கள், ஒரு நீர்மூழ்கி மற்றும் சோனார் மிதவைகளைக் கொண்டு, நீர்மூழ்கியை தேடும் பணிகள் நடைபெறுவதாகவும், நீர்மூழ்கி காணாமல் போன இடம் தொலைதூர பகுதி என்பதால் தேடுதல் பணி கடினமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மீட்புக் குழுவினர் இந்த பணியை தனிப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டு, நீர்மூழ்கியில் உள்ள 5 பேரையும் உயிருடன் மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆழ்கடலில் காணாமல் போன நீர்மூழ்கியில் பிரிட்டனைச் சேர்ந்த 58 வயது கோடீஸ்வரரான ஹாமிஷ் ஹார்டிங் என்பவரும் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வார இறுதியில் ஹார்டிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில். டைட்டானிக் சிதைவுகளை நேரில் பார்க்கப் போவதாக பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், நியூபவுண்ட்லாந்தில் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் குளிர்காலம் மிக மோசமாக இருப்பதால் 2023-ம் ஆண்டில் அவரது பயணமே மனிதர்கள் அங்கே செல்லும் ஒரே பயணமாக இருக்கக் கூடும் என்றும் அவர் கூறியிருந்தார்.
பின்னர் அவரே, “வானிலை சற்று மேம்பட்டிருக்கிறது. ஆழ்கடல் பயணத்தை நாளை மேற்கொள்ளவிருக்கிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீர்மூழ்கிக்குள் இருந்த 5 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது மட்டுமே தங்களது முழு கவனமும் இருப்பதாக ஓஷன்கேட் நிறுவனம் கூறியுள்ளது.
“காணாமல் போன நீர்மூழ்கியுடன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் பல அரசு அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் செய்து வரும் உதவிகளுக்கு பெரிய அளவில் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓஷன்கேட் நிறுவனம் தங்களிடம் 3 நீர்மூழ்கிகள் இருப்பதாக இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அவற்றில் டைட்டன் நீர்மூழ்கி மட்டுமே டைட்டானிக் மூழ்கியுள்ள ஆழத்திற்குச் செல்லக் கூடியது.
10,432 கிலோகிராம் எடை கொண்ட அந்த நீர்மூழ்கியால் 13,100 அடியாழம் வரை செல்ல முடியும், அதில் 5 பேருக்கு 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இஇருப்பு வைக்கப்பட்டிருக்கும் என்று அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
போலார் பிரின்ஸ் என்ற போக்குவரத்து நீர்மூழ்கியே இந்த பயணத்தில் ஈடுபட்டதாக அதன் உரிமையாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆழ்கடலில் டைட்டானிக் மூழ்கியுள்ள இடத்திற்குச் சென்று திரும்பி வர 8 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.
டைட்டானிக் கப்பல் அது கட்டப்பட்ட காலத்தில் இருந்த உலகின் மிகப்பெரிய கப்பல் என்ற பெருமையைப் பெற்றது. 1912-ம் ஆண்டு பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மேற்கொண்ட கன்னிப் பயணத்தின் போதே, அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. பயணிகள், பணியாளர்கள் என அதில் இருந்த 2,200 பேரில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர்.
1985-ம் ஆண்டு அதன் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு டைட்டானிக் மீதான ஆர்வம் உலகெங்கும் அதிகரித்தது.
ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் இரு பாகங்களாக 2,600 அடி இடைவெளியில் கிடக்கின்றன. கடந்த மாதத்தில் ஆழ்கடல் வரைபடக் கலை மூலம் டைட்டானிக் சிதைவுகளின் முழுமையான டிஜிட்டல் வடிவம் உருவாக்கப்பட்டது. கப்பலின் பிரமாண்டம், அதன் ஒரு புரொபல்லரில் குறிப்பிடப்பட்டிருந்த வரிசை எண் போன்றவை அதன் மூலம் தெரியவந்தன.