உயர்தர மாணவர்களுக்கான கல்விசார் தொழில் வழிகாட்டல் செயலமர்வு!

கிளிநொச்சி மாவட்ட செயலக மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களத்தினால் கிளிநொச்சி இந்துக் கல்லூரி உயர்தர மாணவர்களிற்கான கல்விசார் தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வு செயற்றிட்டம் இன்று(21) காலை 9.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தொழில் வழிகாட்டல் செயலமர்வு கிளிநொச்சி இந்துக் கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் கல்லூரி முதல்வர் திருமதி.மீனலோஜினி இதயசுபதாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மாணவர்களின் பாடத் தெரிவுகளை மேற்கொள்ளும் முறைகள், கல்வியில் அடைவு மட்டத்தினை அதிகரிப்பதற்கான வழிமுறைகள், மாணவர்கள் வாழ்க்கையை வெற்றி கொள்வதற்கான திறன்கள் மற்றும் தொழில் தகமைகள், மாணவர்களின் எதிர்காலம் நோக்கிய வளமான வாழ்க்கை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இதனைவிட மாணவர்கள் தமக்கான தொழில் வாய்ப்புக்களை பெற முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பாடசாலை கல்வியின் பின் முன்னெடுக்கக் கூடிய கற்கைகள், வருமானம் ஈட்டும் தொழில் நுட்ப கற்கைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

மேலும் உயர் கல்வி வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளத் தேவையான கல்வி சார்ந்த தொழில் வழிகாட்டல்கள், பல்கலைக்கழக வாய்ப்புக்கள், பரீட்சைக்கு பின்னரான கல்வியல் கல்லூரிக்கான வாய்ப்புக்கள், போட்டிப் பரீட்சைகளுக்கு முகம் கொடுத்து தொழிலைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் தொடர்பாக மாணவர்கள் தெளிவுபடுத்தப்பட்டனர்.

இதன் வளவாளர்களாக மாவட்டச்செயலக மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் சி.சிவசொரூபன், திறன்கள் அபிவிருத்தி மாவட்ட உத்தியோகத்தர் செந்தூரன், தொழிற்பயிற்சி அதிகார சபையின்(VTA) கிளிநொச்சி வளாக ஆங்கில போதனாசிரியர் டெனிக்கிளஸ், இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விரிவுரையாளர் எஸ்.சுமணன், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக உதவிப் பணிப்பாளர் என். கபிலஸ், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின்(NAITA) கிளிநொச்சி மாவட்ட காரியாலய போதனாசிரியர் என். அபிறாம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இச் செயலமர்வில் கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் தரம்12 மற்றும் தரம் 13ஐ சேர்ந்த 170 மாணவர்கள் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களத்தின் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், திறன் விருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் உயர்தர மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.