இந்தியா – பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் ஒரே நேரத்தில்……….
பாகிஸ்தானிற்கு சொந்தமான போர் கப்பல், கொழும்பில் நங்கூரமிட்டுள்ள தருணத்தில், இந்தியாவிற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தியாவிற்கு சொந்தமான ஐ.என்.எஸ் வகீர் என்ற நீர்மூழ்கி கப்பலே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அதிகாரபூர்வ பயணமாக இந்திய நீர்மூழ்கி கப்பல் இவ்வாறு கொழும்பு வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. கொழும்பை வந்தடைந்த நீர்மூழ்கி கப்பலை, இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்றிருந்தனர்.
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள ஐ.என்.எஸ், வகீர் நீர்மூழ்கி கப்பலானது, 67.5 மீட்டர் நீளம் கொண்டது. அதில் 60 வீரர்கள் உள்ளனர்.
இந்த கப்பலின் கட்டளை தளபதியாக கமாண்டர் எஸ். திவாகர் கடமையாற்றி வருகின்றார். இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி கப்பலானது, இந்திய கடற்படையுடன் இணைந்த புதிய நீர்மூழ்கி கப்பலாக கருதப்படுகின்றது.
இந்த நீர்மூழ்கி கப்பல் கல்வாரி வகுப்பை சேர்ந்த ஒன்றாகும்.
இந்த கப்பலின் தயாரிப்பு நடவடிக்கைகள் 2020ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி பணிகள் நிறைவடைந்து அதிகாரப்பூர்வமாக இயக்கப்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சியில், இந்த நீர்மூழ்கி கப்பலில் வருகை தந்த படையினரும், இலங்கை கடற்படை அதிகாரிகயும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஐ.என்.எஸ் வகீர் நீர்மூழ்கி கப்பலின் செயற்பாடுகள் தொடர்பிலும், இந்த பயணத்தின் போது இந்திய படையினர், இலங்கை படையினருக்கு தெளிவூட்டல்களை வழங்கவுள்ளனர்.
அத்துடன், இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்திக் கொள்வது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளிலும் இருநாட்டு அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.
இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஐ.என்.எஸ் வகீர் நீர்மூழ்கி கப்பல், எதிர்வரும் 22ம் தேதி பயணத்தை நிறைவு செய்து, நாட்டிலிருந்து வெளியேறும் என இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.