ஊட்டியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை.
நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீதம் வனப்பகுதியை உள்ளடக்கியது. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் அதிகம் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீா் தேடி குடியிருப்புக்குள் வருவதும், விளைநிலங்களை சேதப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.
எனவே வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கைகளில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்காக சாலையோர வனப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனை அதிகாரிகள் தினந்தோறும் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் ஊட்டி அடுத்த அகலாா்தூனேரி குடியிருப்பு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிப்பதிவுகளை ஆய்வுசெய்து பார்த்தனர். இதில் அந்த பகுதியில் இரவு நேரத்தில் ஒரு சிறுத்தை குடியிருப்பு பகுதியையொட்டி நடமாடுவது தெரிய வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அடர்ந்த காட்டுக்குள் இருந்து தப்பி வந்த சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக, அகலார்தூனேரியில் இரவு நேரங்களில் சுற்றி திரியும் சிறுத்தையை வனத்துறையினர் கண்காணித்து, கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனா்.