டைட்டானில் சென்றோர் குறித்து அமெரிக்க கடலோரப் படை சொன்ன தகவல் …

டைட்டானிக் கப்பலைப் பார்க்கப்போன டைட்டான் நீர்மூழ்கியில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனர் என்று பயண நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடலோரப் படையும் இதை உறுதி செய்துள்ளது.

“எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், ஹமிஷ் ஹார்டிங் மற்றும் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோரை துரதிர்ஷ்டவசமாக இழந்துவிட்டோம் என்று நாங்கள் இப்போது நம்புகிறோம்.” என்று நீர்மூழ்கியை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“இந்த மனிதர்கள் உண்மையான ஆய்வாளர்கள், அவர்கள் தனித்துவமான சாகச உணர்வையும், உலகின் கடல்களை ஆராய்வதற்கும் பாதுகாப்பதற்கும் ஆழ்ந்த ஆர்வத்தையும் கொண்டவர்கள்.. இந்த துயரமான நேரத்தில் எங்கள் இதயங்கள் இந்த ஐந்து ஆன்மாக்களுடனும் அவர்களது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் உள்ளன. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

மீட்புப் பணியில் மிகவும் கடினமாக உழைத்த சர்வதேச சமூகத்தின் பல அமைப்புகளைச் சேர்ந்த எண்ணற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் முழு OceanGate குடும்பமும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்மூழ்கியில் பயணித்தவர்கள் யார்?

காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர்.

  • ஹாமிஷ் ஹார்டிங் – 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார்.
  • ஷாஸாதா தாவூத் – 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்.
  • சுலேமான் தாவூத் – ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர்
  • பவுல் ஹென்றி நர்கோலெட் – 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் ‘டைவர்’ பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு.
  • ஸ்டாக்டன் ரஷ் – 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி.

டைட்டன் நீர்மூழ்கியை தேடும் பணியில் முக்கிய தடயம்

முன்னதாக டைட்டானிக் அருகே தேடுதல் பணி நடைபெறும் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் ஆர்.ஓ.வி வாகனம் சில குப்பைகளைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்தது.

இதுபற்றிய கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இது எதனுடைய சிதைவுகள் என்பதை வல்லுநர்கள் கண்டுபிடிக்க முயன்று வருவதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

டைட்டனை தேடும் பணியில் கப்பல்கள் மட்டுமின்றி ஆர்.ஓ.விகளும் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது 10 ஆயிரம் சதுர மைல் கடல் பகுதியில் தேடுதல் பணி நடந்து வருகிறது.

நீர்மூழ்கியின் தரையிறங்கும் சட்டகம், பின் பக்க உறை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது.

இடிபாடுகளில் கிடைத்தவற்றில் “ஒரு தரையிறங்கும் சட்டகம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஒரு பின்புற உறை” ஆகியவை அடங்கும் என்று பயணிகளின் நண்பரான டேவிட் மியர்ன்ஸிடமிருந்து தகவல் வந்தது.

Leave A Reply

Your email address will not be published.