இலங்கை- 10 விக்கெட் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியது.
ஒருநாள் உலக கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இன்று இலங்கை மற்றும் ஓமன் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய ஓமன் அணி வீரர்கள் இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அதிகபட்சமாக அயன் கான் 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஓமன் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 5 விக்கெட்டுகளையும் லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக திமுத் கருணாரத்னே- பதும் நிசங்கா ஆடினார். ஓமன் அணியின் பந்து வீச்சை சுலபமாக எதிர் கொண்டு விளையாடிய இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. திமுத் கருணாரத்னே அரை சதம் விளாசினார். இலங்கை அணி 15 ஓவரில் 100 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த தகுதிச்சுற்று போட்டிகளில் இலங்கை அணியின் 2-வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் யுஏஇ அணியை 175 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியிருந்தது.