அதிகரிக்கும் ரூ.100 கள்ள நோட்டுகள்… போலீசார் கொடுத்த எச்சரிக்கை!
சென்னையில் பரவும் 100 ரூபாய் கள்ள நோட்டுகளால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் பல இடங்களில் சிறுசிறு பெட்டி கடைகளில், பெட்ரோல் பங்குகளில், உணவகங்களில் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் வேகமாக பரவி வருகிறது.
2000 ரூபாய், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் தான் பெரும்பாலும் புழக்கத்தில் இருந்த நிலையில், பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் ரூ. 100 ரூபாய் கள்ள நோட்டுகள் இது போன்ற சிறு கடைகளிலும் பரவி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து, ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் வாங்கும் போது கவனமுடன் பார்த்து வாங்குமாறு காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, ரூ.2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதையடுத்து, ரூ. 500 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களின் நாணயத் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
இதுஒருபுறமிருக்க, நடப்பாண்டில் மட்டும் 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 14.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ரூ.20, ரூ.500 மதிப்பிலான ரூபாய் கள்ள நோட்டுகள் முறையே 8.4 சதவீதம் மற்றும் 14.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கி மற்றும் அதன் 19 கிளை அலுவலகங்களிலும் இருந்தும் ரூ.3.98 கோடி மதிப்பிலான 79,669 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதர வங்கி அலுவலங்களில் இருந்து ரூ.4.55 கோடி மதிப்பிலான 91,110 ரூபாய் 500 நோட்டுகளை கண்டறிந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது புழக்கத்தில் உள்ள 1,00 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.