உக்ரைனுக்கு 4 ஆயிரம் கோடி அளவில் ஆயுதம் உதவி: அமெரிக்கா.

ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட அதன் அண்டை நாடான உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து ஓராண்டிற்கும் மேலாக போராடி வருகிறது.

இந்த சூழ்நிலையில் உக்ரைனுக்கு, 50-க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகள் உட்பட 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கும் என பென்டகன் அறிவிக்கவிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெதுவாக நகர்ந்து செல்லும் உக்ரைனின் எதிர் தாக்குதலை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவி அமைந்துள்ளது. இந்த உதவித்தொகை குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 2022-ல் உக்ரைனுக்குள் ரஷிய படையெடுப்பிற்கு பிறகு, அமெரிக்க அதிபரின் சிறப்பு அதிகாரத்தின் (Drawdown Authority) மூலம் அமெரிக்கா, ராணுவ ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவது இது 41-வது முறையாகும்.

அதிகாரிகளின் அறிவிப்பின்படி, உயர்-மொபிலிட்டி பீரங்கி ராக்கெட் அமைப்பு (HIMARS) மற்றும் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகளுடன், 30 பிராட்லி சண்டை வாகனங்கள் மற்றும் 25 கவச ஸ்ட்ரைக்கர் வாகனங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் ஆயுத தொகுப்பில் அடங்கும்.

இந்த தொகுப்பில் ஈட்டி மற்றும் அதிவேக கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகள் (HARM Missiles), தடை-நீக்கும் உபகரணங்கள், தகர்த்தல் தளவாடங்கள் (Demolition Munitions) ஆகியவையும் அடங்கும்.

Leave A Reply

Your email address will not be published.