துவரம் பருப்பு விலை 25% வரை உயர்வு… மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு…!
இந்தியாவில் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் நடப்பு நிதியாண்டில் 12 லட்சம் டன் துவரம் பருப்பை மத்திய அரசு இறக்குமதி செய்ய இருக்கிறது.
இந்தியாவில் துவரம் பருப்பு உற்பத்தி குறைந்த வரும் நிலையில் அதன் விலை 25 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்பு இந்தியாவிற்கு வரத் தொடங்கியதும், படிப்படியாக விலை குறையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டில் துவரம் பருப்பு உற்பத்தி 39 லட்சம் டன்னில் இருந்த நிலையில் இந்த ஆண்டு 30 லட்சம் டன்னாக குறைந்ததே விலை ஏற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
ஆண்டுதோறும் இந்தியாவில் 44 முதல் 45 லட்சம் டன் வரை துவரம் பருப்பு நுகர்வு உள்ள நிலையில் தற்போது இறக்குமதி 12 லட்சம் டன் கூடுதலாக செய்யவேண்டியுள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலர் ரோகித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை மியான்மர் மற்றும் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் இருந்து 6 லட்சம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தேவைக்கு ஏற்ப அடுத்தமாதம் கூடுதலாக இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.