தனது அரசியலுக்காகத் தமிழ் மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்தும் விக்கி : சரத் வீரசேகர
“தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் அரசியல் நோக்கங்களுக்காகத் தமிழ் மக்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்திக்கொள்கின்றார். தமிழ் – முஸ்லிம் மக்களை இணைத்துக்கொண்டு அரசு சிறந்த முறையில் அரச நிர்வாகத்தை முன்னெடுக்கும்.”
– இவ்வாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இன்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று நான் தனிநபர் பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைப்பதாகக் குறிப்பிட்டமைக்குத் தற்போது மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
மக்களின் வரிப்பணத்தில் வெள்ளை யானையாகச் செயற்படும் மாகாண சபைகளினால் எவ்வித சேவையும் மக்களுக்குக் கிடைக்கப் பெறவில்லை என்பதை அரசியலில் இருந்தபோதும் குறிப்பிட்டேன்; தற்போதும் குறிப்பிடுகின்றேன். எனக்கு அமைச்சுப் பதவி கிடைக்கப் பெற்றவுடன் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை கிடையாது.
இனப்பிரச்சிரச்சினைக்குத் தீர்வாகவே மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு, கிழக்கில் படுதோல்வியடைவோம் என்பதை நன்கு அறிந்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மாகாண சபைத் தேர்தலை நடத்தினார். வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அரசியல் உரிமை ஜனநாயக முறையில் வழங்கப்பட்டது.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கடந்த அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது. மாகாண சபைத் தேர்தலை அரசு விரைவாக நடத்த வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அன்றும், இன்றும் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை.
பயனற்ற விதத்தில் உள்ள மாகாண சபைத் தேர்தலால் எவ்வித பயனும் எவருக்கும் கிடைக்கப்போவதில்லை. மக்களின் வரிப்பணமே வீண்விரயமாக்கப்படுகின்றது. மாகாண சபை முறைமை நீக்கப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கொள்கையாகும்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் பௌத்த மதம், சிங்கள இனம் தொடர்பில் நாடாளுமன்றில் குறிப்பிடும் கருத்துக்கள் வெறுக்கத்தக்கவையாகக் காணப்படுகின்றன. இவரது கருத்தை இலங்கை வாழ் தமிழ் மக்களின் கருத்து என ஏற்க முடியாது” – என்றார்.