முல்லைத்தீவுக்குப் படையெடுத்துள்ள பௌத்த – சிங்கள கடும்போக்குவாதிகள்!
முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் பௌத்த – சிங்கள கடும்போக்குவாதிகள் படையெடுத்துள்ளனர். அவர்கள் அந்த மாவட்டத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களைச் சந்தித்துள்ளதுடன் சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை விகாரைக்கும் சென்றுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் பயணம் மேற்கொண்ட சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவால் மாவட்ட செயலகத்தில் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளதுடன் கொக்குளாய் பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள சிங்கள மக்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, வட்டுவாகலிலுள்ள கோத்தாபய கடற்படைத்தளத்தில் தங்கி கொக்கிளாயிலுள்ள சம்போதி விகாரைக்குப் பயணம் மேற்கொண்டு, பார்வையிட்டு பிக்குகளுடனும், சிங்கள மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநராக இருந்த அநுராதா யஹம்பத் குருந்தூர்மலைக்குச் சென்று அங்கு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.
திடீரென சிங்கள – பௌத்த கடும்போக்குவாதிகள் முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் படையெடுத்துள்ளமை அங்குள்ள தமிழ் மக்களிடையே பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளது.