மக்கள் மனது ஏன் இவ்வளவு கல்லாக மாறியது?ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த ப்ரீத்தியின் சகோதரர் ஆதங்கம்..!
மக்கள் மனது ஏன் இவ்வளவு கல்லாக மாறியது? என செல்போன் வழிப்பறி சம்பவத்தில் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த ப்ரீத்தியின் சகோதரர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.
சென்னை இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பை தடுக்க முயன்ற இளம்பெண் பிரீத்தி தவறி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் இந்திரா நகர் ரயில் நிலையத்தில் தனது தங்கை விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்ததாகவும், ஆனால் யாருமே தனது தங்கையை காப்பாற்ற முன் வரவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், சுமார் ஒரு மணி நேரமாக தனது தங்கை ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். தனது தங்கையை ஒரு குப்பை போல பிளாட்பாரத்தில் ஓரத்தில் இழுத்துப் போட்டு வைத்திருந்தனர். யாராவது 108க்கு கால் செய்திருந்தால் தனது தங்கை பிழைத்து இருப்பார் என்றும் தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர், ” எனது கோபம் குற்றவாளிகளை விட, ஒரு மணி நேரம் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணை பார்த்து வீடியோ எடுத்துச் சென்ற மக்கள் மீதுதான். இதுவே, அவர்கள் வீட்டு பெண் என்றால் இப்படி வேடிக்கை பார்த்து கடந்து சென்றிருப்பார்களா? என் தங்கை என்ன குப்பையா? பிளாட்பார்ம் ஓரத்தில் இழுத்து போட்டு செல்வதற்கு. ஏன் மக்கள் மனதை இவ்வளவு கல்லாக போனது” என்று வேதனை தெரிவித்தார்.
என் தங்கையின் ஐடி கார்டை பார்த்து ஒரு பெண் எங்களுக்கு கால் செய்து விபரத்தை கூறினார். அதன் பிறகு நாங்கள் ரயில் நிலையம் செல்லும் வரை என் தங்கை இரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என கண்ணீர் விட்டு கதறினார்.