தமிழ் எம்.பி.க்களுக்கு வீரசேகர சவால்.
“நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முடிந்தால் நாடாளுமன்றில் என்னைக் கண்டிக்கட்டும். நான் அவர்களுக்கு அங்கு உரிய பதிலடி கொடுப்பேன்.”
இவ்வாறு தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் கடற்படையின் முன்னாள் தளபதியுமான சரத் வீரசேகர.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர, குருந்தூர் மலையிலிருந்து தன்னை வெளியியேற்றிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை கடுமையாகச் சாடும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன், செ.கஜேந்திரன் ஆகியோர் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.
இது தொடர்பில் சரத் வீரசேகர எம்.பியிடம் ஊடகங்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு – கிழக்கில் நடக்கும் உண்மைகளை தெற்கு மக்களின் பிரதிநிதி என்ற வகையில் அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு.
வடக்கு – கிழக்கு தமிழ்ப் பிரதிநிதிகள் தெற்கிலுள்ள சிங்கள மக்களின் பிரதிநிதிகளை நோக்கி கை நீட்டும்போது நாம் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது.
வடக்கு – கிழக்கில் சட்டத்துக்கு அப்பால், நாட்டின் சட்டத்தை மீறித்தான் தமிழ் மக்களில் ஒரு பகுதியினரும் அவர்களது பிரதிநிதிகளும் செயற்படுகின்றனர். அவர்களின் செயற்பாடுகளுக்கு நீதித்துறையும் துணைபோவது கவலையளிக்கின்றது.
இந்தநிலையில்தான் குறிப்பிட்ட தமிழ் நீதிபதியின் செயற்பாடுகள் தொடர்பில் அதியுயர் சபையில் நான் உண்மைகளை அம்பலப்படுத்தினேன். நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்திச் சொல்லவேண்டிய இடத்தில் – சொல்லவேண்டிய நேரத்தில் எனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளேன்.
அதற்கு எதிராகத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கண்டனங்களை வெளியிடுவார்களாக இருந்தால் அதை அதியுயர் சபையில் வெளியிடட்டும். நானும் அதற்குப் பதிலடிகொடுப்பேன். அவர்கள் வெளியில் தெரிவிக்கும் கருத்துக்களைத் தூக்கி வீசுங்கள்.”- என்றார்.